அண்ணா
இந்த ஒரு வார்த்தைக்கு என் வாழ்வில் மிக சிலரே உள்ளனர்.
அதில் மிகவும் முக்கியமானவர் மற்றும் முதலானவர் என் சீனிவாசண்ணன்.
உண்மையில் அவர் என் அப்பாவின் இளவயது நண்பர். சுமார் 50-ஆண்டுகளுக்கு முன் அவரை என் அம்மாவுக்கு என் அப்பா அறிமுகம் செய்கையில் என் அம்மாவால் 'அண்ணா' என அழைக்கப் பட்டார்.
என் அப்பாவை விட வயதில் குறைவென்றாலும் அவர் வாட்டசாட்டமாக இருந்ததாலோ அல்லது என் அப்பா மிகவும் ஒல்லிப்பிச்சானாக இருந்ததாலோ எதுவோ ஒன்று அவர் என் அப்பாவுக்கும் அண்ணனானார்.
அப்படியே இந்த நட்பு தொடர்ந்து கொண்டிருந்ததால் எங்கள் குடும்ப சொந்தங்களான அக்கக்கா, அம்மம்மா, மற்றும் தாத்தா பாட்டி அத்தை மாமா என அனைவருக்கும் அண்ணனாகினார்.
எனக்குத் திருமணமான பின் என் கணவருக்கும் அண்ணன். மிக பெரிய ஆச்சரியம் ஒற்றை வெள்ளை முடியை பார்த்தாலே தாத்தா பாட்டி என முறை வைத்து விளிக்கும் என் மகன்கள் அவருடைய பஞ்சுத் தலையை கண்ணுற்றும் அண்ணா என்றே விளித்தனர்.
கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலான ஆண்டுகள் நட்பு இருந்தும் அவரது குடும்பத்தாரை குறித்து ஒரு சேதியும் அறிந்ததில்லை. எப்படி அப்படி என்பதற்கான ஞானமும் இல்லை எனக்கு.
இவையெல்லாம் ஒரு புறம் இருக்க என்னுடைய பனிரெண்டு முதலான வயதுகளின் அனைத்து ஞாயிறுகளிலும் அண்ணன் வந்து விடுவார் அதிகாலையில். வந்தால் பின் மதியம் டீ அல்லது காபி சாப்பிட்டு பிறகுதான் அவர் திரும்பி போவார்.
ஆகவே அவரது காலை சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் எங்கள் வீட்டில்தான். என்னுடை ஆதி கால சமையலுக்கு சோதனை எலி சீனிவாசண்ணந்தான்.
என்னுடைய முதல் காபியை போட்டு அவருக்குத்தான் கொடுத்தேன். ஒரு உணர்ச்சி மாறுபாடில்லாமல் அதை குடித்து விட்டு டம்ளரை ஒரு மீட்டர் தள்ளி வைத்தார். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவருடைய கமெண்ட் வாய் வார்த்தையாக தேவை பட்டது.
"அண்ணா காபி எப்பிடி இருக்கு?"
'ரொம்ப நல்லாருக்கு" என்றபடி அந்த காலி டம்ளரை பார்த்ததின் அர்த்தத்தை நான் அந்த காபியை குடித்துப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
பீட்ருட் அல்வா, மீன் குழம்பு, சப்பாத்தி என என் சமையலுக்கு ஆதரவு என் அப்பாவுடன் சேர்ந்து அவர்தான்.
ஒரு தகப்பனை போலதான் பிரியமாயிருந்தார். எங்கள் வளர்ச்சியில் மகிழ்ந்து எங்கள் வீழ்ச்சிகளில் துவண்டு ஒரு குடும்ப உறுப்பினராகவே இருந்து எட்டு வருடம் முன் மறைந்த எங்கள் சீனிவாசண்ணனை நினைத்தாலே மனம் கனக்கிறது.
அதில் ஒரு குற்ற உணர்வும் இருக்கிறது. என்னை பொறுத்த வரை இவர்கள் எல்லாம் மிக பெரியவர்கள். மரியாதைக்குரிய ஸ்தானம்.
நான் சென்னையில் இருந்து கோவை செல்லும் நாட்களில் ஓடோடி வந்து விடுவார், எப்போதுமான வரவுதானே என்றெண்ணி சந்தோஷமாக பேசி சாப்பிட்டு மகிழ்வேன்.
ஆனால் அவரது கடைசி காலம் அவ்வளவு சுகமானதாக இல்லாமல் இருந்ததால் மருந்து செலவுக்கு பணம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்ததை அவர் மரிப்புக்கு பின் தெரிந்து கொண்டேன். அவருக்கு எதுவுமே செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு எனக்கு உண்டு.
Monday, February 25, 2013
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment